ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை சம்பவம்: 'ஆசிரமத்துக்கு எழுதி வைத்த சொத்துகளை 18 வயதுக்கு பிறகு பேரனிடம் சேர்த்து விடுங்கள்'


ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை சம்பவம்: ஆசிரமத்துக்கு எழுதி வைத்த சொத்துகளை 18 வயதுக்கு பிறகு பேரனிடம் சேர்த்து விடுங்கள்
x

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை சம்பவத்தில் ‘ஆசிரமத்துக்கு எழுதி வைத்த சொத்துகளை 18 வயதுக்கு பிறகு பேரனிடம் சேர்த்து விடுங்கள்’ என முதியவரின் உருக்கமான கடிதம் சிக்கியது.

சென்னை

சென்னை அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியை சேர்ந்தவர் கோபாலசாமி (வயது 65). இவர், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்தார். இவருடைய மனைவி பானுமதி (55). இவர்களுடைய மகன் கண்ணபிரான் (39). கம்ப்யூட்டர் சாப்ட்வேர் விற்பனை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் கோபாலசாமி, பானுமதி, கண்ணபிரான் ஆகிய 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் தற்கொலைக்கு முன்னதாக கோபாலசாமி எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எங்கள் மகன் கண்ணபிரானுக்கு 5 வருடங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த வித்யா (35) என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தோம். 4 மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் வித்யா குழந்தையை தூக்கி கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். வித்யாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்தும் வரமறுத்துவிட்டார்.

எங்கள் பேர குழந்தையை பார்க்கவும், கொஞ்சவும் அனுமதிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலும், மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என மன அழுத்தமும் இருந்து வந்தது. இதனால் தற்கொலை செய்கிறோம். எங்களின் சொத்துக்களை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துள்ளோம். எங்களின் பேரனுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தபிறகு அந்த சொத்துக்களை பேரனிடம் சேர்த்துவிடுங்கள்.

இவ்வாறு அதில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story