காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
x

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

குழித்துறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதல் திருமணம்

சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா (வயது 24). இவர் ஓராண்டுக்கு முன்பு நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த தீபக் என்பவரை காதல் திருமணம் செய்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர் தீபக்கை மணந்தார்.

தீபக் திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டம் பகுதியில் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

தற்போது இவர்கள் குழித்துறை அருகே பெருந்தெரு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இளம்பெண் தற்கொலை

இந்தநிலையில் தீபக்கின் தந்தை இறந்து விட்டார். அவருடைய 16-வது நாள் சடங்கு நிகழ்ச்சி நெய்யாற்றின்கரையில் உள்ள வீட்டில் நடந்தது. அங்கு தீபக், வர்ஷாவுடன் சென்று பங்கேற்றார். பின்னர் மீண்டும் அவர்கள் குழித்துறை பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்தனர். அங்கு தீபக்கிற்கும், வர்ஷாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் தீபக் வெளியே சென்று விட்டார்.

இதில் மனமுடைந்த வர்ஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story