காதலி திடீரென மாயம்: விருப்பமில்லாமல் வேறு திருமணம் செய்துகொண்ட காதலன் தற்கொலை


காதலி திடீரென மாயம்: விருப்பமில்லாமல் வேறு திருமணம் செய்துகொண்ட காதலன் தற்கொலை
x

திண்டிவனம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலி திடீரென மாயமானதால் வேறொரு பெண்ணை விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொண்ட கட்டிட தொழிலாளி, விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்

குமரேசன். கட்டட தொழிலாளியான அவர் 7 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும், திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த 23ம் தேதி செஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு, மணப்பெண் திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து குமரேசனுக்கு, அவரது உறவினர்கள், ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஏற்கனவே திருமணம் செய்ய தேதி குறிக்கப்பட்ட அதே நாளில் குமரேசனுக்கு திருமணம் நடந்தது.

தனது காதலியை திருமணம் செய்ய முடியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்ததால் குமரேசன் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு மூன்றாவது நாள் புதூரில் வயலுக்கு செல்வதாகக் கூறி விட்டு சென்றுள்ளார் குமரேசன்.

நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் வயலுக்கு சென்று உறவினர்கள் பார்த்தபோது மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளிமேடு பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தான் தற்கொலை செய்வதற்கு முன்பு குமரேசன் எழுதிய வீடியோ பதிவையும் போலீசார் கைப்பற்றினர்.

தான் தற்கொலை செய்து கொண்டது குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம் என்று வீடியோவில் உருக்கமாக கூறியுள்ள குமரேசன், தன்னை ஏமாற்றிவிட்டு காதலி சென்றது சரியானதா எனவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தன்னை கோழை என நினைக்க வேண்டாம் என்றும், தற்கொலை முடிவுக்காக தன்னை மன்னித்து விடுங்கள் என்றும் உருக்கமாக கூறி வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் குமரசேன். அவரது இந்த வீடியோ பதிவு வைரலாகி அவரது உறவினர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story