தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்லில் நேற்று நடந்த தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி கலெக்டர் ஸ்ரேயாசிங் புத்தகங்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து தற்கொலை தடுப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், மாணவிகள் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை வழியாக சென்று நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தற்கொலைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.
உதவி எண்கள்
இந்த ஊர்வலத்தின்போது மாணவிகள், பொதுமக்களிடம் தற்கொலை தடுக்கக்கூடியது, தகுந்த மனநல உதவி கிடைக்கும் போது சம்பந்தப்பட்ட நபர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மனநல உதவி தேவைப்படும் போதும், தற்கொலை எண்ணம் எழும்போதும் மாநில உதவி எண் 104 மற்றும் மாவட்ட உதவி எண் 89030 79233 போன்றவற்றில் அழைக்கலாம். அனைவரும் ஒன்றிணைத்து நாமக்கல் மாவட்டத்தை தற்கொலை இல்லா மாவட்டமாக உருவாக்க உறுதி ஏற்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நலப்பணிகள் (இணை இயக்குனர்) ராஜ்மோகன், மருத்துவக்கல்லூரி துணை கண்காணிப்பாளர் சுரேஸ்கண்ணன், துணை உறைவிட நிலைய மருத்துவர் அமுதசுரபி, மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.