சூலூர் கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; உடன் தங்கி இருந்த நண்பன் கைது

சூலூர் கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; உடன் தங்கி இருந்த நண்பன் கைது
சூலூர்
சூலூர் கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் உடன் தங்கி இருந்த நண்பன் கைதானார். அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.
கட்டிடத் தொழிலாளி கொலை
திருவாரூரை சேர்ந்தவர் ரவி (வயது 60). இவர் கடந்த 5 வருடமாக சூலூரை அடுத்த செங்கத் துறை பகுதியில் தங்கி இருந்து கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஜயராகவன் (32). மனைவியை பிரிந்து வாழும் இவர் தந்தையுடன் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விஜயராகவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை செங்கத்துறையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பிருந்த சாக்கடை கால்வாயில் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த விஜய ராகவன் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
வாக்கு மூலம்
இதைத்தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, கொலையாளி உருவம் தெளிவாக தெரிந்தது. இதைத் தொடர்ந்து ெகாலையாளி திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (37) என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை சொந்த ஊருக்கு சென்று பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஸ்டாலின் போலீசில் அளித்த பரபரப்பு வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
நானும் விஜயராகவனும் நண்பர்கள். நான் விஜயராகவன் இருக்கும் வீட்டில்தான் தங்கி இருந்து கட்டிட தொழிலாளி யாக வேலை செய்து வந்தேன். அப்போது அவன், நான் சொல்கிறபடிதான் கேட்க வேண்டும் என்று அடிக்கடி என்னை மிரட்டி வந்தான். இதனால் எங்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் இருவரும் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கைது
சம்பவத்தன்று விஜயராகவன் எனது உடைமைகளை தூக்கி வெளியே வீசி விட்டு, என் வீட்டைவிட்டு போ என்றான். மது போதையில் இருந்த நான் கோபத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவன் தலையில் இரண்டு முறை ஓங்கி அடித்தேன்.
அதில் மயங்கிய அவனை என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளி மேலே கல்லை போட்டு மூடி விட்டேன்.
மறுநாள் காலை நான் ஊருக்கு போக வேண்டும் என்று கூறி மேஸ்திரி ரவியிடம் என் சம்பளப் பணத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு சென்றுவிட்டேன். அங்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த என்னைபோலீசார்வந்து பிடித்து விட்டனர். இவ்வாறு கொலையாளியான ஸ்டாலின் கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் கொலையாளி சிக்குவதற்கு அந்த பகுதியில் பொருத்தப்பட்ட காண்காணிப்பு கேமராக்கள் உதவிகரமாக இருந்தன. இவற்றை அந்த பகுதியில் பொருத்தி இருந்த ரங்கசாமி யை இன்ஸ்பெக்டர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.






