கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளபொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்


கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளபொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 May 2023 6:45 PM GMT (Updated: 28 May 2023 6:46 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக அதிக வெப்பம் நிலவுவதால், அதிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெப்பம் அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் கோடை காலத்தின் தொடக்கத்தில் இருந்தே வெப்பம் அதிகரித்து உள்ளது. இதன் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு, இளநீர், லஸ்ஸி, பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு இளநீர் போன்ற திரவ பானங்களை கொடுக்க வேண்டும். வெயில் நேரத்தில் வாகனங்களில் குழந்தைகளை அமர்த்தி அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். முதியவர்கள் போதிய இடைவெளியில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கவனமாக கையாள வேண்டும்

கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும். போதுமான அளவில் தண்ணீர் கொடுக்க வேண்டும். பருவ மாற்றங்களினால் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளில் உள்ள மின் வயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல் மாடி வீடுகளில் மேல் பகுதியில் ஏற்படும் அதிக வெப்பத்தால் வீட்டின் மேல் பகுதியில் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப் லைட் கழன்று கீழே விழும் நிலை ஏற்படுகின்றன.

எனவே கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் போதுமான அளவு தண்ணீரை இருப்பு வைத்து கொள்ள வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் நில ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கியாஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும். மண்எண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story