தமிழ்நாட்டை வறுத்தெடுக்கும் கோடை வெயில்..! 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்
சென்னையில் நேற்றை விட இன்று வெயில் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது. காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் மோசமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து கொண்டே இருந்தது. பகல் 12 மணிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் சாலையில் செல்வோர், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவருமே வெயிலில் குளித்தபடி பயணத்தை தொடர்ந்தனர்.
அதேவேளை சாலையோரம் இருந்த ஜூஸ் கடைகள், இளநீர், சர்பத் கடைகள், பதனீர் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றதை பார்க்க முடிந்தது. விடுமுறை நாட்கள் என்றாலே, வெளியே குடும்பத்துடன் குதூகலமாக 'ரவுண்ட்' செல்லும் சென்னைவாசிகள், நேற்று பகலில் வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
தமிழ்நாட்டில் 13 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாகை, பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது.
சென்னையில் நேற்றை விட இன்று வெயில் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.