மோகனூரில் சூறைக்காற்றுடன் கோடைமழை: 6 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன


மோகனூரில் சூறைக்காற்றுடன் கோடைமழை: 6 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன
x

மோகனூரில் சூறைக்காற்றுடன் பெய்த கோடை மழையால் 6 மின் கம்பங்கள் முறிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

நாமக்கல்

மோகனூர்

கோடைகால மழை

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதுடன், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. இது 109 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கொளுத்தும் வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்தநிலையில் மோகனூாில் நேற்று முன்தினம் மாலை குளிர்ந்த காற்று வீசியது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணிக்கு பலத்த சூறைக்காற்றுடன் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது.

பல்வேறு இடங்களில் பெய்த இந்த கோடை மழையால் வெயிலின் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை ஏற்பட்டது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மோகனூர், வேலூர் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில், ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீருடன், கழிவுநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.

6 மின் கம்பங்கள் முறிந்தன

சூறை காற்று காரணமாக வளையப்பட்டியில் மயானத்தையொட்டி உள்ள இரும்பு வேலியால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் சாய்ந்து விழுந்தது. மேலும் ஒரு சில இடங்களில் அதிக மின்அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர் வெடித்தது.

இந்தநிலையில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஆரியூர், மாரப்பனூர் மற்றும் மணியங்காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 6 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மோகனூர், பேட்டப்பாளையம், கொளத்தூர், ஆரியூர், வளையப்பட்டி, கிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தொடர்ந்து மின் ஊழியர்கள் அங்கு சென்று சோதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மின்சார வினியோகம் செய்யப்பட்டது. மோகனூரில் பகுதியில் திடீரென சூறைகாற்றுடன் பெய்த மழையால் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


Next Story