பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி
ஊட்டி மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
ஊட்டி
ஊட்டி மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
பயிற்சி வகுப்பு
தமிழகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரையும், 5-ந் தேதி முதல் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதற்காக, நீலகிரி மாவட்ட மைய நூலகம், ஊட்டி வட்டார இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் ஊட்டி மைய நூலகத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டது.
இதன்படி நேற்று முன்தினம் நடந்த தொடக்க விழாவிற்கு இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரமோத் தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் ரவி முன்னிலை வகித்தார். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:-
தனித்திறமை
பள்ளி மாணவ-மாணவிகள் கோடை கால விடுமுறையில்பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பதுடன், தங்களிடம் உள்ள தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. வருகிற 29-ந் தேதி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இந்த கோடைகால பயிற்சி வகுப்பில் ஓவியம், கணினி, கையெழுத்து மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பு, விளையாட்டு, நடன பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
மேலும் கதை சொல்லுதல், குறும்படங்களை பள்ளி மாணவர்களுக்கு காண்பிப்பது போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கிறது. நூலகம் வந்து செல்வதால் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்படும். இதன் மூலம் வாழ்க்கையில் அவர்கள் உயர்ந்த குறிக்கோள்களை நிர்ணயம் செய்து, அதை அடைய பாடுபடுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் வாசகர் வட்ட துணை தலைவர் ரமணன், நூலகர் மெட்டில்டா, இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயலட்சுமி, சுல்தானா, ஜோதிலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.