கோடை விடுமுறை: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!
கோடை விடுமுறையை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
நாகை,
கோடை விடுமுறையை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மும்பை, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் முதலில் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கட்டிடக்கலையை கண்டு பிரமித்து நின்று அதன் அழகை கண்டு சொக்கி நிற்கின்றனர்.
பின்னர் வழிநெடுகிழும் அமைந்துள்ள கடைகளில் பிடித்த கடல் சங்கு, சிப்பி அலங்கார தோரணம் மற்றும் தொப்பி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் சுற்றுலா பயணிகள், காலை, மாலை பொழுதில் அங்குள்ள கடலை கண்டு ரசிக்கின்றனர். மேலும் கோடைகாலம் என்பதால், கடலில் கடல் அலைகள் இல்லாமல் குளம்போல் காட்சியளிப்பதால், அங்குள்ள கடலில் இறங்கி கும்மாளம்மிடும் குட்டி, சுட்டிகள் கடலில் குளித்தும், குதூகலித்தும் கோடை விடுமுறையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
வெயில் வாட்டி வதைத்தாலும், வெது, வெதுப்பான கடல் நீரில் தத்தி தாவி சிறு, சிறு அலைகளின் நடுவே அனைவரும் உற்சாக குளியல் போடும் காட்சி தனி அழகே அழகு. வேளாங்கண்ணி பழைய மாதா கோவில், பார்க், கடற்கரை என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுவதால், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு வேளாங்கண்ணியில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கட்டிடக்கலை, கடல் அழகு, சுத்தமான காற்று என சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் சிறந்த இடம் வேளாங்கண்ணி என்றால் அது மிகையில்லை.