மோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவர் உள்பட 2 பேருக்கு சம்மன்


மோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவர் உள்பட 2 பேருக்கு சம்மன்
x
தினத்தந்தி 15 Nov 2023 3:52 AM GMT (Updated: 15 Nov 2023 4:41 AM GMT)

இந்த வழக்கின் புலன் விசாரணை தற்போது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவிற்கு (சி.சி.பி) மாற்றப்பட்டது.

சேலம்,

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 45). இவர் இரும்பாலை சாலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாண் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தொழிலினை விரிவுப்படுத்திட முத்துராமன் என்பவரை அணுகினார்.

அப்போது முத்துராமன் அவரிடம், தான் எம்.எஸ்.எம்.இ. கவுன்சில் தேசிய சேர்மன் பதவி வகிப்பதாகவும், மேலும் நடிகை நமிதாவின் கணவர் சவுத்ரிக்கு ரூ. 4 கோடி பெற்றுக் கொண்டு மாநில சேர்மன் பதவி வழங்கியதாகவும் தெரிவித்தார்.தன்னிடம் ரூ.50 லட்சம் கொடுத்தால் ஒரு மாத காலத்திற்குள் உங்களுக்கு மாநில சேர்மன் பதவி பெற்று தருவதாகவும் முத்துராமன் கூறினார்.

இதை நம்பி கோபால்சாமி கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளியான துஷ்வந்த் யாதவ் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் கொடுத்தார். ஆனால் கூறியபடி அவர்கள் இருவரும் கோபால்சாமிக்கு மாநில சேர்மன் பதவி வாங்கி கொடுக்க வில்லை. பணத்தையும் திரும்ப வழங்கவில்லை.

இது குறித்து கோபால்சாமி அளித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன் மற்றும் துஷ்வந்த் யாதவ் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கின் புலன் விசாரணை தற்போது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவிற்கு (சி.சி.பி) மாற்றப்பட்டது. இதையடுத்து மோசடி புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை நமிதாவின் கணவர் சவுத்ரி, பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு துணை தலைவர் மஞ்சுநாத் உள்பட 2 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story