திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமைதங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா: திரளான பக்தர்கள் தரிசனம்


திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமைதங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர்  சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா: திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆவணி திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

7-ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு உருகுசட்டசேவைக்கு பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம், வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தங்க சப்பரத்தில் வீதிஉலா

காலையில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில் சிவன் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று, பச்சை சாத்தி...

8-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வருகிறார். மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


Next Story