திருநங்கைகள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்


திருநங்கைகள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் கல்வி அறிவை வளர்த்து கொண்டு சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து வர வேண்டும் என்றும், குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்ட அரங்கில் திருநங்கைகளுடன் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் தனியார்துறை அதிகாரிகள் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைப்பதற்கான ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கும், அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிவதற்கும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். சுயதொழில் செய்ய அரசு மானியத்தில் வங்கி மூலம் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் திருநங்கைகள் மேற்படிப்பு தொடர்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கல்வி அறிவை பெறவேண்டும்

இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், தற்போது சமுதாயத்தில் பல திருநங்கைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். நீங்கள் அனைவரும் உங்களது கல்வி அறிவை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் உங்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சமுதாயத்தில் உயர்ந்து அந்தஸ்துக்கு வரவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் சிறந்தவர்களாக இருப்பதற்கான தகுதியை வளர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் அனைவரிடமிருந்தும் உருவாக்கப்பட வேண்டும். போக்குவரத்து சிக்னல்கள், தேசிய நெடுஞ்சாலை, டோல்கேட் போன்ற இடங்களில் திருநங்கைகள் சிலர் நன்கொடையாக பணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.

குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது

திருநங்கைகள் எந்தவித குற்ற செயல்களிலும் ஈடுபடாமல், உங்களுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் வேலை வாய்ப்பை பெற்று, உங்களை பற்றிய புரிதல்களை சமுதாயத்தில் நல்ல விதமாக ஏற்படுத்தி, நல்ல மாற்றத்தை உருவாக்குங்கள்' என்று பேசினார்.

தொடர்ந்து சிறப்பாக தொழில் நடத்தும் திருநங்கைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் திருநங்கைகளுக்கும், மாவட்டத்தில் முதல் முறையாக கனரக ஓட்டுனர் உரிமம் பெற்ற திருநங்கைக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ்‌ சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், தூத்துக்குடி நகர உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story