ஆழ்குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம்


ஆழ்குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:46 PM GMT)

மங்களகுடியில் புதிதாக ஆழ்குழாய்கள் அமைத்து அதன் மூலம் ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யலாம் என சமரச கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

மங்களகுடியில் புதிதாக ஆழ்குழாய்கள் அமைத்து அதன் மூலம் ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யலாம் என சமரச கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மறியல் போராட்டம்

திருவாடானை தாலுகா கட்டிவயல், வெள்ளையபுரம், பனஞ்சாயல், ஒரியூர் ஊராட்சிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மங்களகுடி நீரேற்று நிலையத்திலிருந்து வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தடைபட்டுள்ளதையொட்டி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி நான்கு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜன் முன்னிலை வகித்தார். இதில், ஊராட்சி தலைவர்கள் பரக்கத் அலி, மோகன்ராஜ், முத்துராமலிங்கம், நிரோஷா கோகுல், ஓரியூர் ஊராட்சி துணை தலைவர் அசரப்அலி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதிய ஆழ்குழாய்கள்

கூட்டத்தில், மங்களகுடி நீரேற்று நிலையத்திலிருந்து நான்கு ஆழ்குழாய் மூலம் 7 ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டது. இதில் இரண்டு ஆழ் குழாய்கள் செயல்படவில்லை. தினமும் 5 மணி நேரம் மட்டுமே மோட்டார் இயக்க முடியும் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதனை சரி செய்திடும் வகையில் 7 ஊராட்சிகளின் கணக்கு எண் இரண்டில் இருப்பில் உள்ள தொகையில் கலெக்டர் அனுமதி பெற்று சமமான நிதியை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கி அதன் மூலம் மங்களகுடியில் புதிதாக ஆழ்குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யலாம் என ஊராட்சி தலைவர்களின் கருத்தை ஏற்று நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஊராட்சி தலைவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.


Next Story