விவசாயிகளுக்கு ரூ.65 லட்சத்தில் பவர் டில்லர் எந்திரங்கள் வழங்கல்
விவசாயிகளுக்கு ரூ.65 லட்சத்தில் பவர் டில்லர் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
குளித்தலையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை எந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குளித்தலை வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு, 31 விவசாயிகளுக்கு, ரூ.65 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான பவர் டில்லர் எந்திரங்களை வழங்கி பேசினார்.
தொடர்ந்து குளித்தலை வேளாண்மை துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சிறுதானிய உணவு பொருட்களை பயிரிடுதல் மற்றும் உண்ணுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் பிரசாரம் செய்வதற்காக பயன்படுத்த இருந்த திட்ட விளக்க பிரசார ஊர்தி பயணத்தை மாணிக்கம் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் சிவானந்தம், துணை வேளாண்மை அலுவலர் கணேசன், வேளாண்மை துறை அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.