மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு


மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
x

புதிய கொள்கை படி பணி வழங்கும் தமிழக அரசின் முடிவை ஏற்று பணியில் சேருபவர்கள் சேரலாம் என்று தெரிவித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசால் பணி அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர், கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தின் போது திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக, திமுக ஆட்சியில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவதும், அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் ஆவதுமாக இந்த விவகாரம் தற்போது வரை உள்ளது.

2011ல் மீண்டும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் ரூ.7500 ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து, மக்கள் நலப் பணியாளர்களை ரூ.7,500 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்த தமிழக அரசு முன்மொழிவு கொண்டுவந்தது.

இதனை எதிர்த்து, இந்த வழக்கு தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பிலான இடையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

அப்போது விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பிலான இடையீட்டு மனுவை முடித்து வைத்து கோர்ட்டு தெரிவித்ததாவது:-

"வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவு கட்டாயப்படுத்தவில்லை. புதிய கொள்கை படி பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை.

இந்த முன்மொழிவை ஏற்று பணியில் சேருபவர்கள் சேரலாம். அரசின் முன்மொழிவை மறுத்து பணியை ஏற்காதவர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. ஆனால் ஒட்டுமொத்தமாக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது.

அரசின் புதிய கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும்" என்று தெரிவித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.



Next Story