வயலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்


வயலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
x

வயலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.

திருச்சி

கந்த சஷ்டி விழா

திருச்சி வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 26, 27-ந் தேதிகளில் சிங்காரவேலர் சேஷ வாகனம், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

இதையடுத்து 28-ந் தேதி அன்ன வாகனத்தில் சிங்காரவேலர் எழுந்தருளி யானை முக சூரனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் இரவு சிங்காரவேலர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளித்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

இதைத்தொடர்ந்து நேற்று காலை 10.30 மணி அளவில் சூரபத்மனை வதம் செய்வதற்காக தாய் சக்தி தேவியிடம் சக்திவேல் வாங்கிய நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து இரவில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் இன்று(திங்கட்கிழமை) இரவு 7 மணி அளவில் நடைபெறுகிறது. விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வழிவிடு வேல்முருகன் கோவில்

இதேபோல் திருச்சி ஜங்ஷனில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணிய நகர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா அப்பகுதியில் வாழும் மக்கள், இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோரால் நடத்தப்பட்டது. இதையொட்டி இலங்கை தமிழர்கள் 7 நாட்கள் விரதம் இருந்து, நேற்று நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முருகப்பெருமானையும், சூரபத்மனையும் தோளில் சுமந்து வந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தா.பேட்டை, உப்பிலியபுரம், முசிறி

தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலில் கந்த சஷ்டியையொட்டி சக்திவேலை அம்பிகையிடம் பெற்றுக் கொண்ட முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது யானை முகசூரன், சிங்கமுகன், தாரகாசுரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவர்படை, அசுரப்படை வேடமணிந்த பக்தர்கள் போரில் ஈடுபட்ட காட்சி தத்ரூபமாக நடந்தது. திரளான பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர். பின்னர் கோவிலுக்குள் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உப்பிலியபுரத்தில் உள்ள நித்திய கல்யாணி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியருக்கு கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று சூரசம்ஹார விழாவில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் வெவ்வேறு முகத்தில் சூரபத்மன் வந்தபோது முருகப்பெருமான் எதிர்கொண்டு வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story