தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம்; 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு


தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம்; 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு
x

பாளையங்கோட்டையில் நடந்த தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் அணிவகுத்த 11 அம்மன் சப்பரங்களை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

திருநெல்வேலி

தசரா திருவிழா

நெல்லை பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதேபோல் பாளையங்கோட்டை பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா திருவிழா தொடங்கியது.

இரவில் அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. அம்மன் சப்பரங்கள் பாளையங்கோட்டை தெருக்களில் பவனி வந்தன. அங்கிருந்து சப்பரங்கள் ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அப்போது மேளதாளம் முழங்க சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சப்பரங்கள் அந்தந்த கோவிலுக்கு சென்றன.

சூரசம்ஹாரம்

தசரா திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. 11 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் பவனி வந்தன. நேற்று காலை 8 மணியளவில் 11 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அங்கு திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் 1 மணியளவில் ராஜகோபாலசாமி கோவில் முன்பும், இரவு 7 மணியளவில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியிலும் 11 சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. அப்போது திரளான பக்தர்கள் தேய்காய் உடைத்து வழிபட்டனர்.

பின்னர் அங்கிருந்து நள்ளிரவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 11 அம்மன் சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து அங்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story