கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்


கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்

கந்த சஷ்டி விழா

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலைக்குன்றின் மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை உடையது. மற்ற முருகன் கோவில்களில் முருகன் கையில் வேல் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் முருகன் கையில் வேலுக்கு பதிலாக செங்கரும்பு ஏந்தி நிற்பார். இதனால் இந்த முருகனுக்கு செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

இந்த கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 27-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் ஏகாதச ருத்ர ஜெபமும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

கந்த சஷ்டியின் பெருவிழா நேற்று கோவிலில் நேற்று விமரிசையாக நடந்தது. நேற்று காலை கோவில் வளாகத்தில் ஷண்முகா ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் தண்டாயுதபாணி உற்சவர் சுவாமி சிலைகளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, விபூதி, பழவகைகள் மற்றும் கலச தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாலையில் உற்சவர் சுவாமி சிலைகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளோடு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

திரளான பக்தர்கள் தரிசனம்

இதில் பெரம்பலூர் மாவட்டமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். மேலும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இன்று திருக்கல்யாண உற்சவம்

இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு செட்டிகுளம் கடைவீதி அருகே உள்ள ஏகாம்பரேசுவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) விடையாற்றியுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. இதேபோல் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று காலை முருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சூரசம்ஹாரம்

இதேபோல் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் கோவிலின் முன்பு சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடந்தது.

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் இன்று மாலை திருக்கல்யாண சீர்வரிசை எடுத்து பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வந்து சுப்ரமணியசுவாமிக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதேபோல் கந்த சஷ்டி விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story