கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு
பந்தலூர் அருகே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
காட்டு யானைகள்
பந்தலூர் அருகே பிதிர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை, முக்கட்டி, பாட்டவயல் பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அங்கு பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. தொடர்ந்து சுல்த்தான்பத்தேரி செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகின்றன. மேலும் குடியிருப்புகளை முற்றுகையிடுவதோடு, சில நேரங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கூடலூர் கோட்ட வன அலுவலர் ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்புசாமி ஆகியோர் உத்தரவின் படி, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள நெலாக்கோட்டை, முக்கட்டி, பாட்டவயல் இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
நவீன கேமராக்கள்
இதன் மூலம் வனப்பகுதியில் இருந்து கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகள் வழியாக ஊருக்குள் புகும் யானைகளை வீடியோவாக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பகுதி வனத்துறையினருக்கு அனுப்பப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து விரட்டும் பணியில் ஈடுபட உதவியாக இருக்கும்.
இதைத்தொடர்ந்து பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்ஷன், வன காப்பாளர்கள் மில்டன் பிரபு, பொம்மன், மணி மற்றும் வனத்துறையினர் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, நவீன கேமராக்கள் மூலம் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் போது, அதில் பொருத்தப்பட்டு உள்ள கருவி மூலம் செல்போனுக்கு புகைப்படம் அனுப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றனர். பாட்டவயல் போலீஸ் சோதனைச்சாவடி அருகே கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.