குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா
சின்னசேலம் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
சின்னசேலம்
சின்னசேலம் நகரப்பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார், வணிகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியோடு சின்னசேலம் நகர பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் ஆகியோரின் பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்பு, வணிக நிறுவனங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்களை தடுப்பது ஆகியவற்றுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களும் அச்சப்படுகின்றனர். அந்த வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படுவதை கொண்டு குற்ற நிகழ்வுகளை தடுக்க முடியும். இதற்கு உதவி புரிந்த முக்கிய பிரமுகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு கணேஷ், நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் ஏ.டி.ஆறுமுகம் மற்றும் ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள், அனைத்து வியாபாரிகள் உள்ளிட்ட நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாககுப்பம், காட்டானந்தல் கிராமங்களில் புற காவல் நிலையங்களின் செயல்பாட்டை போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்.