கடைகளுக்கு வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்


கடைகளுக்கு வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
x

சாலைகள் முழுமையாக தெரியும் அளவுக்கு கடைகளுக்கு வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வணிகர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர்


சாலைகள் முழுமையாக தெரியும் அளவுக்கு கடைகளுக்கு வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வணிகர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

கலந்தாலோசனை

தஞ்சை கீழவாசல் டவுன் போலீஸ் நிலையம் சாலையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதியும், கடைகளின் பாதுகாப்பு பற்றியும், கண்காணிப்பு கேமராவின் முக்கியத்துவம் பற்றியும் பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகளின் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த கேமராக்கள் மூலம் பொருட்களை யாரும் திருடுகிறார்களா? என்பதை கண்காணிக்க முடியும். ஆனால் சாலைகள் தெரியும் அளவுக்கு பெரும்பாலான கடைகளுக்கு வெளியே கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இது தான் மிக முக்கியம்.

கடைகளுக்கு வெளியே கேமரா

பொருட்களை திருடி விட்டு வெளியே செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதையும், திருடுவதற்காக யாரெல்லாம் எந்தெந்த வாகனங்களில் வந்தார்கள் என்பதையும் கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் மூலமாக எளிதாக கண்டறியமுடியும். மேலும் அந்த கேமராக்கள் மூலம் சாலைகளில் நடந்து செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

எனவே வணிகர்கள் அனைவரும் தங்களது கடைகளுக்கு வெளியே சாலைகள் தெரியும்படி கண்காணிப்பு கேமராக்களை பொருத்திவிட்டு, எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வியாபாரிகளுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் போலீசார் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அடிக்கடி ரோந்து பணி

இதையடுத்து வணிகர்கள் கூறும்போது, போலீசாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். மாநகரில் இரவு நேரங்களில் அதிகஅளவில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும். வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். மாநகரில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

அந்த கண்காணிப்பு கேமராக்களை எல்லாம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story