பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது


பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:46 PM GMT)

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

அரிசி ஆலை தொழிலாளி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 42). இவர் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜி, வி.சாலை பகுதியில் தான் புதிதாக வாங்கிய வீட்டுமனைக்கான பட்டாவை பெயர் மாற்றம் செய்வதற்காக விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரியும் வெங்கடாசலம்(27) என்பவரை அணுகினார். அப்போது வெங்கடாசலம் பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று ராஜியிடம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜி இது பற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து வெங்கடாசலத்தை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.

சர்வேயர் கைது

அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை ராஜியிடம் போலீசார் கொடுத்ததுடன், அந்த பணத்தை வெங்கடாசலத்திடம் கொடுக்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து ராஜி நேற்று மதியம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் சென்று சர்வேயர் வெங்கடாசலத்திடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி உள்ளிட்ட போலீசார் லஞ்சப்பணத்தை வாங்கிய வெங்கடாசலத்தை கையும் களவுமாக மடக்கி பிடித்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story