வீடியோ பதிவு செய்து அனுப்பிவிட்டு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருப்பூரில் நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால் இளம்பெண் வீடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தற்கொலை
சென்னையை சேர்ந்தவர் சொர்ணகலா (வயது 36). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் திருப்பூர் செட்டிபாளையத்தை அடுத்த பிரியங்காநகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சுரேஷ் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சொர்ணகலா ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களது குழந்தை சென்னையில் உள்ள தாத்தா-பாட்டி பராமரிப்பில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சொர்ணகலா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சொர்ணகலா செல்போனில் உருக்கமாக பேசி ஒரு வீடியோவை பதிவு செய்து, அதை தனது கணவர், தந்தை மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த சுரேஷ் பதறியடித்து வீட்டிற்கு சென்ற நிலையில் சொர்ணகலா விஷம் குடித்து இறந்து கிடந்தார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சொர்ணகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உருக்கமான வீடியோ
போலீஸ் விசாரணையில், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், இதனால் சொர்ணகலா சில நேரங்களில் கணவரிடம் கோபித்துக்கொண்டு சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்வார் என்றும் தெரிய வந்தது.
இந்த நிலையில் சொர்ணகலா பேசி, பதிவு செய்து அனுப்பிய வீடியோவில், "இது என்னோட கடைசி வீடியோ. என்னுடைய கணவர் எனது தந்தையை தவிர வேறு எந்த ஆண்களுடன் பேசினாலும் சந்தேகப்படுகிறார், ஏற்கனவே நான் ரெயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றபோது எனது தோழிதான் வந்து என்னை காப்பாற்றினார். இப்போது எனது குழந்தையை விட்டு போறதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவள யாரு பாத்துக்குவானு தெரியல. என் குழந்தையை என்னோட அப்பா, அம்மா பாத்துக்கனும். என்னோட ரெண்டு தங்கச்சிங்க பொறுப்புலதான் குடுத்துட்டு போறேன். அவங்க பாத்துக்குவாங்கனு நம்பிக்கை இருக்கு. நான் போறேன்.
இவ்வாறு சொர்ணகலா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
அந்த வீடியோ வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அந்த வீடியோவில் சொர்ணகலா பேசி இருப்பதில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அவருடைய கணவர், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் வீடியோ பதிவு செய்து அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.