தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
திருப்பூர்


கடன் சுமை காரணமாக கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூலித்தொழிலாளி

திருப்பூர் அம்மன் நகர் வடக்கு பூலுவப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 44). இவரது மனைவி சத்யா(40). இவர்களுக்கு சவீதா(16) மற்றும் ரித்திஷ்(13) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். செல்வம் திருப்பூரில் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் மற்றும் விசா வாங்க சேலத்தை சேர்ந்த புரோக்கர் ஒருவரிடம் செல்வம் சென்றுள்ளார். பாஸ்போர்ட் மற்றும் விசா வாங்க புரோக்கரிடம் பணம் கொடுக்க உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணத்தை கடன் வாங்கி உள்ளார். கொரோனா காலத்தினால் செல்வம் வெளிநாடு செல்வதற்கு முடியவில்லை. எனவே கடன் சுமை ஆனது. இது குறித்து அடிக்கடி குடும்பத்தினரிடம் புலம்பி வந்துள்ளார். அதனால் மன விரக்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

விஷம் குடித்து தற்கொலை

கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவருடைய சொந்த ஊரிலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். அப்போது உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களால் செல்வம் காப்பாற்றப்பட்டார். கடந்த 8-ந் தேதி சேலம் சென்று பாஸ்போர்ட் மற்றும் விசா வாங்கிவிட்டு சென்னைக்கு சென்று ஏதேனும் வேலை கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு வருவதாக தன் குடும்பத்தில் தெரிவித்து விட்டு சென்றவர் சில தினங்களாக வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வெள்ளகோவில், வெள்ளமடை பிரிவு அருகில் உள்ள மணியக்காரர் தோட்டத்தில் செல்வம் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) கலந்து குடித்துள்ளார். அதனால் செல்வம் வாயில் நுரை தள்ளியபடி கிடந்துள்ளார். இதை பார்த்த தோட்ட உரிமையாளர்கள் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலிசார் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வத்தை கொண்டு வந்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்

இதையடுத்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story