குழந்தையை விற்க முயன்றஅரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம்
குழந்தையை விற்க முயன்ற திருச்செங்கோடு அரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு:
குழந்தையை விற்க முயன்ற திருச்செங்கோடு அரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரசு டாக்டர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்- நாகஜோதி தம்பதிக்கு கடந்த 12-ந் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டராக அனுராதா என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாள் (38) என்பவர் மூலம் ரூ.2 லட்சம் தருவதாக தினேசிடம் பேரம் பேசி பச்சிளம் குழந்தையை விற்க கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
டாக்டர், புரோக்கர் கைது
இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் வழக்குப்பதிவு செய்து டாக்டர் அனுராதா, குழந்தைகள் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்தார். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், டாக்டர் அனுராதாவிற்கு திருச்செங்கோட்டில் 2 கிளினிக்குகள் உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்புக்கு வந்த பெண்ணை அனுராதா மூளைச்சலவை செய்து அவருடைய கிளினிக்கிலேயே குழந்தை பெற்றெடுக்க வைத்து அதனை விற்று ரூ.3 லட்சம் பெற்றார். மேலும் டாக்டர், புரோக்கர் சேர்ந்து 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ததும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பணம் பெற்று கொண்டு ஆட்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
பணியிடை நீக்கம்
இதனைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் நிறைய புரோக்கர்களுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் புரோக்கர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குழந்தை விற்றல் சம்பவத்தில் தொடர்புடைய அரசு டாக்டர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் நேற்று திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்ததற்கான உத்தரவை தலைமை டாக்டர் மோகன பானுவிடம் வழங்கினார்
குழந்தைகளை விற்று பல லட்சம் ரூபாய் பெற்ற புரோக்கர்
கைதான புரோக்கர் லோகாம்பாள் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் லோகாம்பாள் திருச்செங்கோடு சாணார்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்தபடி குழந்ைத விற்பனை செய்து வந்தார். அதன்படி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த தனம் என்பவரது குழந்தையை பெருந்துறையை சேர்ந்த ஒருவருக்கு ரூ.3 லட்சத்துக்கு விற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து திருச்செங்கோடு தோக்கவாடியை சேர்ந்த உன்னி என்பவருக்கு தெரிந்தவரின் ஆண் குழந்தையை வாங்கி நெல்லையை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு ரூ.3 லட்சத்துக்கும், 4 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த சித்ரா என்ற புரோக்கர் மூலம் பெண் குழந்தையை வாங்கி தென்காசியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.2.70 லட்சத்துக்கும் விற்றுள்ளார். மேலும் திருச்சியை சேர்ந்தவர் மூலம் சில பெண்களிடம் சிறுநீரகத்தை வாங்க முயன்றுள்ளார். குழந்தைகளை விற்று பல லட்சம் ரூபாய்களை பெற்று வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் லோகாம்பாளுக்கு டாக்டர் அனுராதாவுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு முன் அனுராதா கொடுத்த ஆண் குழந்தையை ரூ.3.30 லட்சத்துக்கு விற்று அதில் குறிப்பிட்ட பணத்தை கொடுத்தாா். இதனைத்தொடர்ந்து அனுராதா கூறியதன்பேரில் தினேசிடம் குழந்தையை பெற முயன்றபோது அவர் அளித்த புகாரில் இருவரும் சிக்கியதாக லோகாம்பாள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-------------------