ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

தேவனாம்பட்டு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தாத ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கலசபாக்கம்
தேவனாம்பட்டு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தாத ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புகார் மனு
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவனாம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் கவுரிகாசிநாதன் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தேவனாம்பட்டு ஊராட்சியில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு பொதுமக்களின் தேவைக்காக சிறுபாலம், தடுப்பணை கட்டுதல், சிமெண்டு சாலை அமைத்தல் உள்பட 5 பணிகளுக்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டது.
ஆனாலும் பணிகள் செயல்படுத்த முடியவில்லை. மேலும் 100 நாள் வேலையையும் பொதுமக்களுக்கு வழங்க முடியவில்லை. இதனால் பொதுமக்களின் நலன் கருதி இப்பணிகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.
தலைமை பொறியாளர் ஆய்வு
இதனடிப்படையில் கடந்த 17-ந் தேதி சென்னையில் இருந்து ஊரக வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் தேவனாம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் தலைமை பொறியாளர் விசாரணை நடத்தினார்.
பணியிடை நீக்கம்
விசாரணையில் ஊராட்சி செயலாளர் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குந்தகம் விளைவிக்கும் நோக்கோடும், ஊராட்சி செயலாளர் கடமையில் இருந்து தவறியதும், உயரதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றாதது தெரிய வந்தது.
இதையடுத்து ஊராட்சி செயலாளர் எம்.ரமேசை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் திருமால் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.