தாசில்தார் பணியிடை நீக்கம்: வருவாய்த்துறையினர் போராட்டம்-சேலத்தில் பரபரப்பு
தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சேலத்தில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பணியிடை நீக்கம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத்துணை தலைவர் அர்த்தனாரி தலைமையில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் ஏராளமானவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இது குறித்து அர்த்தனாரி கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தார் மனோஜ் முனியப்பன். இவர் தலைமையில் அலுவலர்கள், கோர்ட்டு உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். அதன்பிறகு தாசில்தார் மனோஜ் முனியப்பனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
கண்டிக்கத்தக்கது
எனவே தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து தாசில்தார் பணியிடை நீக்கத்தை உடனே ரத்து செய்து, அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி உள்ளோம். அரசு புதிய திட்டங்கள் அறிவிக்கும் போது அதை வருவாய்த்துறை அலுவலர்கள் தான் நிறைவேற்றி வருகின்றனர்.
இதற்காக புதிய ஆட்களை அரசு நியமிப்பது இல்லை. பணிச்சுமை அதிகம் ஏற்படும் நேரத்தில் கால, நேரம் பார்க்காமல் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் எந்த விசாரணையும் இன்றி தாசில்தார் பணியிடை நீக்கம் செய்தது கண்டிக்க தக்கது.
பணிகள் பாதிப்பு
இந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் பணியை புறக்கணித்து கலந்து கொண்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் மகளிர் உரிமை தொகை திட்டப்பணிகள் உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பணிகள் முற்றிலும் பாதித்து உள்ளது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் படிக்கட்டில் அமர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சங்ககிரி
சங்ககிரி வட்ட கிளை வருவாய்த்துறை சங்கத்தினர் சேலம் மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் தலைமையில் ஊழியர்கள், அலுவலர்கள் பணிக்கு வராமல் போராட்டம் நடத்தினர். வட்ட தலைவர் மகேந்திரன், செயலாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் 14 பேர் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தால் உதவி கலெக்டர், தாலுகா அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.