லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

கண்ணமங்கலம் அருகே பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆரணி
கண்ணமங்கலம் அருகே பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வீடுவழங்கும் திட்டத்தில் லஞ்சம்
கண்ணமங்கலத்தை அடுத்த அத்திமலைப்பட்டு ஊராட்சியில் விநாயகபுரம், பட்டாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தற்போது அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக சங்கர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சி செயலராக ரமேஷ் வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அத்திமலைப்பட்டு ஊராட்சியில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் கடந்த 2019-2020-ம் ஆண்டு 22 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு தலா ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் ஊராட்சி தலைவர் சங்கர் மற்றும் ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் 22 பயனாளிகளிடமும் தலா ரூ.30,000 லஞ்சமாக கேட்டதாகவும், முதல் கட்டமாக ரூ.6 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம்
2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. பணி ஆணை வழங்க ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலார் ஆகியோர் மீதம் உள்ள லஞ்ச தொகையினை பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் ரமேஷை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு, விசாரணை நடத்திட மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.