மனைவி நடத்தையில் சந்தேகம்: குழந்தைகளை கொன்று இரும்பு வியாபாரி தற்கொலை - சென்னையில் பயங்கரம்
கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும் சிறுது காலம் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
சென்னை,
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 47). இவரது மனைவி யமுனா (வயது 37). இந்த தம்பதிக்கு சாய் சுவாதி (வயது 14) என்ற மகளும், தேஜேஸ்வரன் (வயது 6) என்ற மகனும் இருந்தனர். மோகன்ராஜ் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வந்தார். யமுனா தி.நகரில் உள்ள ஒரு பிரிண்டிங் பிரசில் வேலை செய்து வருகிறார்.
இதனிடையே, தனக்கும் மனைவிக்கும் 10 வயது வேறுபாடு என்பதை எண்ணி மோகன்ராஜ்-க்கு யமுனாவின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
இதையடுத்து இருவீட்டார் தலையிட்டு சமரசம் செய்ததையடுத்து மோகன்ராஜ்-வும் யமுனாவும் இரு குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் தொடர்ந்து சந்தேகப்பட்ட மோகன்ராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மோகன்ராஜ் நேற்று காலை தனது 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.
மனைவி யமுனா நேற்று காலை வேலைக்கு சென்றபின்னர் வீட்டில் இருந்த மோகன்ராஜ் தனது மகள் சாய் சுவாதியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் மகன் தேஜேஸ்வரனை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். 2 பிள்ளைகளையும் கொன்ற பின்னர், வீட்டில் உள்ள மின்விசிறியில் மோகன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலை முடிந்து நேற்று மாலை 6 மணியளவில் யமுனா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது கணவர் மற்றும் குழந்தைகளை அழைத்தும் யாரும் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து யமுனா உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, தனது கணவன், குழந்தைகள் பிணமாக கிடப்பதை கண்டு யமுனா அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தைகளை கொன்று, தற்கொலை செய்வதற்குமுன் மோகன்ராஜ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மனைவி யமுனாவின் தவறான முடிவால் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. எவ்வளவோ எடுத்துக்கூறியும் நான் சொல்வதை யமுனா கேட்கவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தேன். நான் இல்லாமல் பிள்ளைகள் அனாதையாகிவிடுவார்கள் என்ற பயத்தால் அவர்களையும் கொன்றுவிட்டேன் என எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், யமுனாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.