நீச்சல் குளம்-உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும்


நீச்சல் குளம்-உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும்
x

பெரம்பலூரில் நீச்சல் குளத்தையும், உடற்பயிற்சி கூடத்தையும் திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

நீச்சல் குளம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளமும், உடற்பயிற்சி கூடமும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கின் போது அரசின் உத்தரவின்படி மூடப்பட்டது. அதன் பிறகு கொரோனா ஊரடங்கில் அரசு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் பெரம்பலூர் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு இன்றி பழுதாகியதால் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் ஆகியவை பழுது பார்த்து புனரமைக்கப்பட்டது. மேலும் நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பழுது பார்த்து புனரமைக்கப்பட்டதால் நீச்சல் குளமும், உடற்பயிற்சி கூடமும் கடந்த 13-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை நீச்சல் குளமும், உடற்பயிற்சி கூடமும் திறக்கப்படாததால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திறக்க கோரிக்கை

நீச்சல் குளம் திறக்கப்பட்டால் நீச்சல் பயிற்சி பெற நிறைய சிறுவர்கள் வருவார்கள். மேலும் தற்போது கோடை வெயிலை சமாளிப்பதற்காக குளிப்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நீச்சல் குளத்திற்கு வருகை தருவார்கள். உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டால் பயிற்சி பெற நிறைய பேர் வருவார்கள். நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறவும், குளிப்பதற்கும், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறவும் ஜி.எஸ்.டி. வரியுடன் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் மாவட்ட விளையாட்டு வளாகத்துக்கு வருமானம் கிடைக்கும்.ஆனால் தற்போது நீச்சல் குளமும், உடற்பயிற்சி கூடமும் மூடப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தையும், உடற்பயிற்சி கூடத்தையும் உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story