போலி பயனாளிகளை உருவாக்கி பல லட்சம் ரூபாய் மோசடி


போலி பயனாளிகளை உருவாக்கி பல லட்சம் ரூபாய் மோசடி
x

திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் போலி பயனாளிகளை உருவாக்கி பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்த ஆடியோ தற்போது பரவி வருகிறது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் போலி பயனாளிகளை உருவாக்கி பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்த ஆடியோ தற்போது பரவி வருகிறது.

போலி பயனாளி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) என்பது ஆதிதிராவிட மக்கள் குடியிருப்பதற்கான வீடுகளை கட்டும் வகையில் 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆதிதிராவிடர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் 1980-ம் ஆண்டு முதல் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாட்கோ மூலம் மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத்திட்டம், தொழில்முனைவோர் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திட்டங்களைப் பொறுத்து பயனாளிகளுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அடித்தட்டு மக்களின் வாழ்வியலை மேம்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி உயர்த்தும் வகையில் தாட்கோ மூலம் அரசு உதவிகள் வழங்கி வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் மேம்பாட்டுக்கான கடன் வழங்கும் திட்டத்தில் போலி பயனாளிகளை உருவாக்கி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

3 லட்சம் கடன்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆதி திராவிட மக்கள், குறிப்பாக பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்கிறது. இதற்காக வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவியை புரோக்கர்கள் மூலம் போலி பயனாளிகளை உருவாக்கி சிலர் முறைகேடாக பெற்றுள்ளனர். இது குறித்து பயனாளியான பெண் ஒருவருடன் புரோக்கர் மற்றும் தையல் எந்திரங்கள் விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்தவர் பேசும் செல் போன் உரையாடல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதன்படி மடத்துக்குளம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை தாராபுரத்தைச் சேர்ந்த புரோக்கராக செயல்பட்ட நபர் போலி பயனாளியாக உருவாக்கியுள்ளார். கூலி வேலைக்கு செல்லும் படிப்பறிவில்லாத அந்த பெண்ணை தையல் கலைஞராக சித்தரித்துள்ளனர். மேலும் அவர் மூலம் விண்ணப்பித்து, ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் தொடங்குவதற்காக ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளனர். தாட்கோ அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தையல் எந்திரங்களை காண்பித்துவிட்டு பின்னர் எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கு அந்த பெண்ணுக்கு சில ஆயிரங்களை பரிசாக கொடுத்துள்ளனர். தாட்கோ மூலம் தையல் எந்திரங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு முழுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் எதிர்பாராத விதமாக மீண்டும் ஆய்வுக்கு வந்தபோது இந்த குட்டு வெளிப்பட்டுள்ளது. உடனடியாக அந்தப் பெண், புரோக்கருக்கு போன் செய்து நியாயம் கேட்கிறார்.

மானியத்தொகை

நாம் குடும்ப செலவுக்கு தான் பணம் வாங்குகிறோம். கம்பெனி ஆரம்பிக்கிறதுக்கு இல்லை. அரசாங்கம் சொல்ற மாதிரியெல்லாம் நாம் கேட்க முடியாது. கடன் வாங்குகிற வரை தான் பேங்க் மேனேஜரை பார்த்து பயப்படணும். அதுக்கப்புறம் அவன் தான் பயப்படணும். ரூ.10 லட்சம் வாங்கி குடுத்தவனெல்லாம் பேசாம இருக்கிறான். ரூ.3 லட்சம் வாங்கிட்டு இந்த பாடு படுத்தறே என்று அந்த புரோக்கர் சலித்துக் கொள்கிறார்.

பின்னர் தையல் எந்திர விற்பனையாளர் அந்த பெண்ணை சமாதானப்படுத்துகிறார். இதன் மூலம் அந்த பெண்ணை போலி பயனாளியாக பயன்படுத்தி விற்பனையாளர் பயனடைந்திருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பலரை போலி பயனாளிகளாக பயன்படுத்தி பல லட்சங்கள் மோசடி நடைபெற்றிருக்கக் கூடும். இந்த மோசடி உண்மையாக இருக்கும் பட்சத்தில் உண்மையான பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்காமல் போகிறது. அவர் மூலம் உருவாக்கப்படும் தொழில் நிறுவனங்களால் பல நூறு தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிபோகிறது. அரசு வழங்கும் மானியத்தொகை யாரோ ஒரு பணக்கார முதலாளியின் பாக்கெட்டுக்கு போகிறது. எனவே இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

நடவடிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் தாட்கோ மூலம் தொழிலுக்காக வழங்கப்பட்ட கடனுதவி குறித்தும், அந்த நிறுவனங்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அத்துடன் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர். ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகளை தட்டிப்பறிப்பதான இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

பல தொழில்முனைவோர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடனுதவி உரிய காலத்தில் கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ள குற்றச்சாட்டையும் இந்த நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story