தாசில்தார், ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
தாசில்தார், ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உள்ள விழுப்பணங்குறிச்சியை சேர்ந்தவர் சந்திரகாசன்(வயது 53). இவர், தனது தந்தை பெருமாள் கடந்த 1971-ம் ஆண்டு கிரைய ஆவணம் மூலம் பெற்ற நிலத்தை, தனது பெயரில் பட்டா மாற்றம் செய்து தருமாறு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செந்துறை தாசில்தாரிடம் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்திருந்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் செந்துறை தாசில்தார் மீது கடந்த 2019-ம் ஆண்டு சந்திரகாசன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதில், சந்திரகாசனின் தந்தை பெயர் பட்டாவில் நீக்கம் செய்யப்பட்டு, வேறு நபர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று தாசில்தார் தரப்பில் கூறும் நிலையில், புகார்தாரருக்கு ஏன் பதில் அளிக்கவில்லை என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. நில அளவை, உட்பிரிவு, பட்டா பெயர் மாற்றம் கோருவது உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு ஆணை பிறப்பிப்பது தாசில்தாரின் கடமையாகும். இந்த வழக்கில் பட்டா மாற்றம் கோரி சந்திரகாசன் அளித்த விண்ணப்பத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் செந்துறை தாசில்தார் எடுக்கவில்லை என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 மாதங்களுக்கு மேலாக எவ்வித பதிலையும் வழங்காமல் இருந்தது சேவை குறைபாடு. புகார்தாரர் சமர்ப்பித்த மனு மீது நான்கு வார காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்டு அதனை அவருக்கு தெரிவிக்க வேண்டும். 2018-ம் ஆண்டு புகார்தாரர் பட்டா மாற்றம் கேட்டு மனு செய்த நாள் முதல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாள் வரை பணியாற்றிய செந்துறை தாசில்தார் அல்லது தாசில்தார்கள் புகார்தாரருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.