விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது
விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சுப்பிரமணியன். விவசாயி. இவரது விவசாய நிலத்திற்கு அருகே மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து இவரது நிலம் வழியாக மின்சார கம்பி செல்கிறது. இந்த கம்பி அங்குள்ள பொதுபாதையில் இருந்த மரத்தின் கிளைகள் மீது உரசியபடி சென்றதால், அந்த மரக்கிளைகளை சுப்பிரமணியன் வெட்டி உள்ளார். இதையறிந்த மருங்காபுரி தாசில்தார் லட்சுமி சுப்பிரமணியனிடம் சென்று அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுபற்றி சுப்பிரமணியன் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர்கள் கொடுத்த யோசனைபடி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்தை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் லட்சுமியிடம் கொடுத்தார். பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தாசில்தார் லட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.