வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த மருமகனிடம் இருந்து பணத்தை வாங்கி முதியவரிடம் ஒப்படைப்பு; ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி


வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த மருமகனிடம் இருந்து பணத்தை வாங்கி முதியவரிடம் ஒப்படைப்பு; ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி
x

மாமனாரிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த மருமகனிடம் இருந்து ரூ.65 ஆயிரத்தை வாங்கி முதியவரிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்.

சென்னை

70 வயது முதியவர்

ஆவடி பாரதி நகர் கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் தயாளமூர்த்தி என்ற பிலிப்பு (வயது 70). இவருடைய மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். அவரை தொடர்ந்து மூத்த மகள் பிரியா மற்றும் மகன் டேனியல் சம்பத் ஆகியோரும் இறந்துவிட்டனர்.

இவரது இன்னொரு மகளான தீபா, அவரது கணவர் ரவியுடன் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். மகன், மகள், மனைவி ஆகியோர் இறந்து விட்டதால் தயாளமூர்த்தி தனியாக வசிக்க முடியாத சூழ்நிலையில் சென்னை நங்கநல்லூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கி வருகிறார். அங்கு அவர் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

பணத்தை தராமல் இழுத்தடிப்பு

தயாளமூர்த்தியின் மருமகன் ரவி, ஆவடி காமராஜர் நகர் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். அவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு தயாளமூர்த்தி ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரவி மாமனாரிடம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் வரை திருப்பி கொடுத்துவிட்டதாக தெரிகிறது.

ஆனால் மீதமுள்ள ரூ.65 ஆயிரத்தை மாமனாருக்கு கொடுக்காமல் ரவி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தயாளமூர்த்தி, 10 நாட்களுக்கு முன்பு ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தனது மருமகன் பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாகவும், அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தருமாறும் புகார் கொடுத்தார்்.

அந்த புகாரின் மீது விசாரணை செய்யுமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தார்.ஆவடி குற்றப்பிரிவு போலீசார் தயாளமூர்த்தி மற்றும் அவரது மருமகனை வரவழைத்து விசாரித்தனர்.

கமிஷனர் பெற்றுகொடுத்தார்

அப்போது ரவி, தனது மாமனாரிடம் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். ஆனாலும் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் தயாளமூர்த்தி மீண்டும் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் கொடுத்தார்.

அவரது புகாரை உன்னிப்பாக கவனித்து சீனியர் சிட்டிசன் என்ற முறையில் அவரது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், முதியவருக்கு அவரது மருமகன் ரவி தரவேண்டிய ரூ.65 ஆயிரத்தை உடனடியாக பெற்று கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தயாளமூர்த்தி, ஆவடி போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story