செல்போனில் சிலருடன் பேச்சு: கள்ளக்காதலியை வெட்டிக்கொலை செய்த காவலாளி


செல்போனில் சிலருடன் பேச்சு: கள்ளக்காதலியை வெட்டிக்கொலை செய்த காவலாளி
x

செல்போனில் சிலருடன் பேசியதால் ஆத்திரமடைந்து கள்ளக்காதலியை காவலாளி வெட்டிக்கொலை செய்தார்.

கோவை,

கோவை அருகே மதுக்கரை சுந்தராபுரம் ரோடு முத்துவேலப்பகவுண்டர் லைன் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமாரி (வயது 41). இவருடைய கணவர் செல்வக்குமார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதுடைய ஒரு மகன் பிளஸ்-2 படிக்கிறார். 15 வயதுடைய மற்றொரு மகன் 10-ம் வகுப்பு படிக்கிறார். செல்வக்குமார் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் வசந்தகுமாரி சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகன்களை கவனித்து வந்தார். இந்த நிலையில் அதே குடியிருப்பில் வசித்து வந்த காவலாளி பேச்சிமுத்து (64) என்பவருடன் வசந்தகுமாரிக்கு பழக்கம் ஏற்பட்டது. பேச்சிமுத்துவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அரிசிபாளையத்தில் வசித்து வருகிறார்கள்.

பேச்சிமுத்து தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகாரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முத்துவேலப்பகவுண்டர் லைனில் வீடு எடுத்து தங்கியிருந்தார். அப்போது தான் பேச்சிமுத்துவுக்கும், வசந்தகுமாரிக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதற்கிடையில் வசந்தகுமாரி செல்போனில் சிலருடன் பேசியதாக தெரிகிறது. இதனால் தன்னை தவிர வேறு சிலருடனும் பழகுவதாக பேச்சிமுத்து சந்தேகப்பட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் வசந்தகுமாரி, தனது மகன்கள் தூங்கிய பிறகு பேச்சிமுத்து வசிக்கும் வீட்டிற்கு சென்றார்.

அப்போது நடத்தையில் சந்தேகம் தொடர்பாக பேச்சிமுத்துவுக்கும், வசந்தகுமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து, அங்கிருந்த அரிவாளை எடுத்து வசந்தகுமாரியை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வசந்தகுமாரி, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வசந்தகுமாரியை கொலை செய்து தப்பிய கள்ளக்காதலன் பேச்சிமுத்துவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story