கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி


கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி
x

கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர்

தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி, 2-ம் கட்டமாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் கூட்டரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் மருத்துவர் சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முரண், முயற்சி, வெற்றி என்ற தலைப்பில் நர்த்தகி நடராஜ் பேசுகையில், தாங்கள் காணும் கனவினை மிகப்பெரிய கனவாக எடுத்துக்கொண்டு, அதற்கான கடின முயற்சியை மேற்கொள்வதன் மூலம் வெற்றி என்ற இலக்கினை எளிதாக அடைவது மட்டுமின்றி, இந்த சமுதாயத்தில் தான் யார் என்பதை நிரூபிக்க முடியும். உங்கள் வாழ்க்கையில் உங்களின் இலக்கிற்கு முரணாக அமையும் அனைத்தையும் எதிர்த்து போராடி வெற்றி காண வேண்டும், என்றார். அறுசுவை உணவின் அறிவியல் என்ற தலைப்பில் மருத்துவர் சிவராமன் பேசுகையில், தமிழர் கலாசார உணவு வகைகளில் அறுசுவை உணவை எடுத்து கொண்டதன் காரணமாக நமது முன்னோர்கள் நோயற்ற வாழ்வை வாழ்ந்தனர். இன்றைய சூழலில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்ப்பதற்காக உணவில் துவர்ப்பு, கசப்பு சுவை உள்ள உணவினை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் தமிழரின் தொன்மையை, நாகரிகத்தை, பண்பாட்டை, உணவு முறைகளை உள்வாங்கி அனைவருக்கும் எடுத்துரைக்கும் தூதுவர்களாக செயல்பட வேண்டும், என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story