அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி


அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:45 PM GMT)

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் சாருஸ்ரீ உள்பட பலர் பங்கேற்றனர்.

திருவாரூர்


திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் சாருஸ்ரீ உள்பட பலர் பங்கேற்ற னர்.

தமிழ் பண்பாடுகளின் பெருமை

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்த தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ் கனவு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. உலகில் செழிந்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ் பண்பாடுகளின் பெருமையினையும், வளமையினையும் அம்மொழி எதிர்கொண்ட சவால்களை மாணவ-மாணவிகளிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும். நமது பண்பாட்டின் பெருமையினை இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உணர்த்துவது ஆரோக்கிய எதிர்கால சமுதாயத்தின் முக்கியமான பகுதியாகும்.

எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழ் மரபும், நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி, கல்விபுரட்சி, அரசின் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவுகளை கொண்ட மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

உலகிலேயே தொன்மையான மொழி

இதில் பங்குபெறும் மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த வழிகாட்டி புத்தகம், தமிழ் பெருமிதம் குறித்த கையேடு வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை படித்து மாணவ-மாணவிகள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கவிஞர் நந்தலாலா, ஈரம் கசியும் கதைகள் என்ற தலைப்பில் பேசுகையில், உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் மொழி. கீழடி அகழ்வாராய்வில் கிடைக்க பெற்ற நெல்மணிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டது.

தமிழ் மொழியின் தோற்றம் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக திருக்குறள் வள்ளுவரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை எழுதிய இளங்கோவடிகள் திருக்குறளை பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளார். படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் தமிழ் மொழியை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு நடத்தும் தமிழ் கனவு நிகழ்ச்சி மூலம் உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான உந்து சக்தி கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசு

அதனை தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கிடையே சொற்பொழிவாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில், சிறந்த கேள்வி கேட்ட சிறந்த கேள்வியாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, திறன் பயிற்சித்துறை உதவி இயக்குனர் செந்தில்குமாரி, மாபெரும் தமிழ் கனவு மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜன், தாசில்தார்கள் நக்கீரன், ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story