கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி


கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
x

கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில் நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ்கனவு என்கிற சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கவிஞர் நந்தலாலா பெண்ணுக்குள் ஞான ஒளி என்ற தலைப்பின் கீழும், டாக்டர் யாழினி கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்ட வரலாறு என்ற தலைப்பின் கீழும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே பேசினர். மேலும் தமிழ் பெருமிதம்-துணுக்குகள் வாசிப்பு, மாபெரும் தமிழ் கனவு காணொளி, முதல் சொற்பொழிவு, கேள்வி-பதில் பகுதி, 2-ம் சொற்பொழிவு, கேள்வி-பதில் பகுதி, பரிசளிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் துணுக்குகள் வாசிப்பில் சிறந்து விளங்கிய 5 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பெருமித செல்வன், செல்வி பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், சிறந்த முறையில் கேள்விகள் கேட்ட 3 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவருக்கும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதங்கள் குறித்த குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது. இதே போல் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடக்கிறது.


Next Story