இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் மே 18 சர்வதேச இனப்படுகொலை நாள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நெல்லை பீட்டர் தலைமை தாங்கினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த அப்துல் ஜப்பார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தமிழீழ மக்கள் படுகொலையை இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும். ஐ.நா மன்றமே இலங்கையிலும், உலகமெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. வக்கீல் சுதர்சன், கொற்றவை இலக்கிய பேரவை மாரியப்ப பாண்டியன், மனித உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சவுந்திர திருச்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.