தமிழக சட்டசபை கூடியது; பட்ஜெட் தாக்கல் தொடக்கம்


தமிழக சட்டசபை கூடியது; பட்ஜெட் தாக்கல் தொடக்கம்
x

தமிழக சட்டசபையில் 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில், 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை (வரவு-செலவு கணக்கு) தாக்கல் செய்வதற்காக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

2 மணி நேர உரை கடந்த சில ஆண்டுகளாகவே காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் அவ்வாறே தாக்கலாகிறது. மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியை பார்த்து, அவர் பட்ஜெட் உரையை வாசிக்கிறார். உறுப்பினர்களும் தங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியில் பட்ஜெட் உரையை பார்த்து தெரிந்து கொள்வார்கள். சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரை இடம்பெறும் என்று தெரிகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெண்களுக்கு உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும்" என்று அறிவித்தார். எனவே, இந்த பட்ஜெட்டை பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு?, பயனாளிகளுக்கான வரைமுறை என்ன? என்பது பட்ஜெட் அறிவிப்பில்தான் தெரியவரும். மேலும், பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story