தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
எல்காட் நிறுவனம்
தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா எம்.எல்.ஏ. (தாம்பரம்) தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), தமிழரசி (மானாமதுரை), நாகை மாலி (கீழ்வேளூர்), பாலாஜி (திருப்போரூர்), மனோகரன் (நாங்குநேரி) ஆகியோர் நேற்று மதுரை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், சட்டமன்றப்பேரவை இணைச்செயலாளர் பாண்டியன், மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதலில் இந்த குழுவினர் மதுரை சொக்கிக்குளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் இலந்தைக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் எல்காட் நிறுவனம், இலந்தைக்குளம் துணை மின்நிலையம், அவனியாபுரம் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் அரசு திட்ட பணிகளை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
ஆய்வுக்கூட்டம்
இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் குழுவினர் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
எந்த பொறுப்பை யாரிடத்தில் ஒப்படைத்தால் அந்த செயலை முழுமையாக செய்து முடிப்பார்கள் என்பதை அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு அமைக்கப்பட்டு மக்கள் நலப்பணியாற்ற அறிவுறுத்தி உள்ளார்கள். அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை தென் மாவட்டங்களில் மதுரை மாவட்டத்தை தலைநகராகக் கொண்டு மக்களுக்கு அந்த திட்டத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வளர்ச்சி திட்டங்கள்
சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஸ்டாலின், "எல்லோருக்கும் எல்லாம்" என்ற அடிப்படையில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நிதி செலவினம் போன்ற நடைமுறைகளை கண்காணித்திடும் நோக்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கீழ் மதிப்பீட்டுக் குழு, பொதுகணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு போன்ற குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், பொது நிறுவனங்கள் குழு தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையினை அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கிறது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.