தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை வருகை
தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவள விழாவில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகிறார். இதையொட்டி விழா நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவள விழாவில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகிறார். இதையொட்டி விழா நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
கலைக்கல்லூரி பவளவிழா
தமிழையும், சைவத்தையும் பரப்பும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் மயிலாடுதுறையில் உள்ளது. இங்கு ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியும் ஆதீனத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழா கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் பவளவிழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள பவளவிழா கலையரங்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணியளவில் திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து தருமையாதீன ஒலி, ஒளி தொலைக்காட்சி, வானொலி பதிவகத்தை திறந்து வைத்தும், பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல் வெளியிட்டும் சிறப்புரையாற்றுகிறார்.
கலெக்டர் ஆய்வு
இதையடுத்து விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தருமபுர ஆதீன குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சாமிகள் உடனிருந்தார். மேலும் விழா அரங்கத்திற்கு வருகை தரும் வழிப்பாதை, விழா அரங்கம் உள்ளிட்டவைகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கல்லூரி செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.