காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட ஆய்வு


காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட ஆய்வு
x

காஞ்சீபுரம், வாலாஜாபாத்தில் கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம்

கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாநகராட்சிகுட்பட்ட பட்டாளத்தெரு அரசு தொடக்கப்பள்ளியில் செயல்படுத்திவரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டியை காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் சாப்பிட்டு உணவின் தரத்தை பரிசோதித்தனர். பின்னர் காந்தி சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் குழந்தைகள் மையத்தையும், வாலாஜாபாத் ஒன்றியம் புளியம்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் உயரம், எடை மற்றும் விவரங்கள் அடங்கிய பதிவேட்டையும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு தரத்தையும் ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து புளியம்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டுவரும் ரேஷன்கடையில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் பொருட்களின் இருப்பு நிலவரம் மற்றும் தரம் போன்றவற்றை சரிபார்த்தனர்.

இதன் தொடர்ச்சியாக சங்கராபுரம் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பாகற்காய் கொடி தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கினார்கள்.

தரிசு நில தொகுப்பு

பின்னர் பழையசீவரம் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நில தொகுப்பை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு விதை, தென்னை மற்றும் இடுபொருட்கள் வழங்கினார்கள். அதன்பின் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட நசரத்பேட்டையில் இயங்கிவரும் அரசு பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்க்கும் பணிகளை பார்வையிட்டு, ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.

ஆய்வின்போது வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், பழைய சீவரம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி நீலமேகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story