தமிழ்நாடு பருத்தி கழகம் தொடங்கப்படும்


தமிழ்நாடு பருத்தி கழகம் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பருத்தியை வாங்கி இருப்பு வைக்க தமிழ்நாடு பருத்தி கழகம் தொடங்கப்பட உள்ளதாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

கோவை

பருத்தியை வாங்கி இருப்பு வைக்க தமிழ்நாடு பருத்தி கழகம் தொடங்கப்பட உள்ளதாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கோவை சிட்கோ பகுதியில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

சீருடை தயாரிப்பு

தமிழ்நாடு பஞ்சாலை கழகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு 9 லட்சம் மீட்டர் பள்ளிச் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஏர்ஜெட் எந்திரம் மூலம் உற்பத்தியை பெருக்க என்னென்ன தேவை இருக்கிறது, குறை இருக்கிறது? என்பதை நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளோம்.

பழைய விசைத்தறி எந்திரங்களை எடுத்து விட்டு ஏர்ஜெட் எந்திரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இப்போது கோவையில் 12 ஏர்ஜெட் எந்திரங்கள் இருக்கிறது. மேலும் 12 ஏர்ஜெட் எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்பட இருக்கிறது. உற்பத்தியை பெருக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஏர்ஜெட் எந்திரம் அமைப்பதோடு, அந்த எந்திரத்திற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் பெற உள்ளோம்.

கடன் வாங்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட் டாலும், 25 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் கொடுக்கின்றனர்.

லாபம் கிடைக்கும்

கூடுதல் எந்திரங்கள் மூலம் வரும் உற்பத்தி லாபத்தை கொண்டு 5 ஆண்டுகளுக்கு கடன் கட்டினால், அதன் பிறகு மின்சார செலவு இல்லாமல் 15 ஆண்டுகளுக்கு லாபமாக இருக்கும்.

இதன் மூலம் வருங்காலத்தில் இந்த துறை லாபம் கிடைக்கும் துறையாக மாறும்.

தமிழக அரசுக்கு சொந்தமான 18 ஸ்பின்னிங் மில்களில் 12 மூடப்பட்டு விட்டன. 6 மில்கள் தான் இயங்குகிறது.

அதுவும் தமிழக முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்கவில்லை என்றால் அந்த 6 மில்களும் மூடப்பட்டிருக்கும், தற்போது அந்த மில்களும் கொஞ்சம் கொஞ்சமாக லாபத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நம்மிடம் இயங்காமல் இருக்கும் 12 மில்லுக்கு மட்டும் 486 ஏக்கர் நிலம் இருக்கிறது. மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது. 34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கிறது. அதை மினி ஜவுளி பூங்கா போன்று என்ன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என ஆலோசனை நடத்தி வருகிறோம்.


5 தேசிய பஞ்சாலை மூடி கிடக்கிறது. தற்போது நமது துறை மூலம் என்ன செய்ய முடியுமோ அதை மிக சிறப்பாக செய்கிறோம். மொத்தமாக 125 லட்சம் பேல் பஞ்சு தமிழகத்திற்கு தேவை. 15 லட்சம் பேல்கள் இங்கு உற்பத்தியாகிறது. காட்டன் கார்ப்பரேசன் பஞ்சு எல்லாம் வடமாநிலங்களில் உள்ள குடோ னில் இருந்து வருகிறது. தென்னிந்திய பஞ்சாலை சங்கம் உள்ளிட்ட சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.

அப்போது வடமாநிலம் சென்று பஞ்சு வாங்கி வருவதால் அதிக செலவு ஏற்பட்டு வருவதாகவும், தமிழக அரசால் விதிக்கப்படும் செஸ் வரியை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதை முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து உடனடியாக நீக்கி னார். ஆனால் பருத்தி விலையை நாம் நிர்ணயம் செய்ய முடியாது, அது மத்திய அரசின் கையில் உள்ளது.

அனைவருக்கும் வேலை

காட்டன் கார்ப்பரேசன் இந்தியா போல தமிழ்நாடு பருத்தி கழகம் தொடங்க திட்டம் இருக்கிறது. போதிய நிதி இல்லாததால் காலதாமதம் ஆகிறது. அது அமைந்து விட்டால் பருத்தியை வாங்கி இருப்பு வைத்து விலையை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

மில்களில் தமிழக தொழிலாளர்கள் போதிய அளவுக்கு வருவது இல்லை. அதனால் வடமாநில தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். ரெயில்வே துறையில் இங்குள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், மொழி தெரியாதவர்களை தமிழகத்தில் பணிக்கு வைத்து உள்ளது போல இல்லாமல், அனைவருக்கும் வேலை வழங்கப்படுகிறது

இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார். பின்னர் அவர், துணிநூல் ஜவுளித்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.


Next Story