தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலை நடத்தலாம் - ஐகோர்ட்டு உத்தரவு


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலை நடத்தலாம் - ஐகோர்ட்டு உத்தரவு
x

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலை இன்று (சனிக்கிழமை) நடத்தலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் 14-ந்தேதி தேர்தல் அதிகாரி வெளியிட்டார். இந்த தேர்தலில், பெருநகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஒரு நபர் மட்டுமே ஓட்டு போட முடியும். சம்பந்தப்பட்ட சங்கம் பரிந்துரை செய்யும் நபரே ஓட்டு போடவும், தேர்தலில் போட்டியிடவும் முடியும்.

இந்த நிலையில், மாவட்ட கிளப் பரிந்துரை செய்யாத வாக்காளர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் ஓட்டு போடவும், போட்டியிடவும் எஸ்.ரமணன் என்பவரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், விழுப்புரம் சங்கத்தை சேர்ந்த அசோக் சிகாமணி என்பவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதுமுறையல்ல. எனவே ரமணன் தான் ஓட்டு போடவும், தேர்தலில் போட்டியிடவும் முடியும் என்று மனுதாரர் வக்கீல் தரப்பில் வாதிடப்பட்டது.

இதுபோல பிற மனுதாரர்கள் சார்பிலும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கான தேர்தலை அறிவித்தப்படி இன்று (சனிக்கிழமை) நடத்தலாம். ஆனால், இந்த தேர்தல், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்கப்பட்டுள்ள மாவட்ட பதிவாளர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தேர்தல் அதிகாரி சந்திரசேகரன் உள்ளிட்டோர் 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story