தமிழ்நாடு நாள் விழா ஊர்வலம்
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி சேலத்தில் மாணவ, மாணவிகளின் ஊர்வலம் நடைபெற்றது.
புகைப்பட கண்காட்சி
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கூறும் போது, தமிழ்நாடு நாள் விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பொதுமக்கள் பார்வையிட்டு சிறப்பு வாய்ந்த நிகழ்வு குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.
ஊர்வலம்
பின்னர் மாணவ- மாணவிகள் பங்கேற்ற ஊர்வலத்தை அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலம் பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை வழியாக சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்வளர்ச்சித்துறை மூலம் தமிழ்நாடு நாள் விழா தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.