என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை - அன்புமணி ராமதாஸ் பேட்டி


என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை - அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதே எங்களுடைய கோரிக்கை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கடலூர்,

கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு இனி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தக்கூடாது. தொடர்ந்து என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகள் கடந்த 66 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ஒரு காலத்தில் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர், என்எல்சியால் தற்போது ஆயிரம் அடிக்குச் சென்றுவிட்டது. 66 ஆண்டு காலமாக இந்த பழுப்பு நிலக்கரியை எரித்து, மின்சாரம் தயாரித்து கொண்டிருக்கிற என்எல்சி வெளிவிடும் நச்சுவாயுக்களால் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் சுவாச பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, ரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்எல்சி நிறுவனத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்படவில்லை. இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலே எங்களுடைய கோரிக்கை என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை.

என்எல்சியால் தமிழ்நாட்டிற்கு 800 முதல் 1000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கின்றது. தமிழ்நாட்டுக்கு ஒருநாளுக்கு தேவைப்படும் மின்சாரம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட். அதில் மிகக்குறைந்த அளவில் தான் என்எல்சி நிறுவனம் கொடுக்கிறது. நாம் வேறு வகையிலே இந்த மின்சாரத்தை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story