தமிழக மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி


தமிழக மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 16 Oct 2023 12:03 PM GMT (Updated: 16 Oct 2023 12:29 PM GMT)

தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து இலங்கை தூதரக அலுவலகத்தின் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் தூதரக அலுவலகத்தின் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் விசைப்படகுகளில் பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க சென்ற போது நேற்று 27 மீனவர்களும், அவர்களது 5 இயந்திர படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச கடல் எல்லையை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள். இந்த மீனவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்செய்தி கடலோர மாவட்ட மீனவர்களிடையே கடும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை பகுதியை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. கடற்பகுதியில் மீன்பிடிக்கச் செல்கிற தமிழக மீனவர்கள் இரவு நேரங்களில் சர்வதேச கடல் எல்லை எங்கே இருக்கிறது என்பதை சரியாக கணிக்க முடியாத காரணத்தால் தவறுதலாக எல்லையை தாண்டி செல்கிற நிலை ஏற்படுகிறது. இரு நாடுகளின் கடல் பகுதியில் எல்லைகளை வகுக்கலாமே தவிர, மீன்பிடிக்க செல்கிற மீனவர்களை எல்லையை தாண்டுவதாக காரணம் கூறி இலங்கை ராணுவம் கைது செய்வது மனிதாபிமானமற்றது. மிகமிக கொடூரமானது.

அதேபோல, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றவர்கள் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி முதல் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். அவர்கள் திட்டமிட்டபடி சனிக்கிழமை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில் இது, அவர்களது குடும்பத்தினரிடையே மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதை தடுத்து நிறுத்துகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு இதுவரை இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடல் தாமரை மாநாடு நடத்திய பா.ஜ.க.வினர் தமிழக மீனவர்களின் நலனை புறக்கணிக்கிற வகையில் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக பிரதமர் மோடி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக மீனவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் துன்பத்திற்கு ஆளாகி, வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் தூதரக அலுவலகத்தின் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story