கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமநாதபுரம்,
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டைப் பெற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் அவர்கள் காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 23 மீனவர்களை கைது செய்ததோடு, 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள், நேற்றைய தினம் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 20 பேரை விடுதலை செய்த இலங்கை கோர்ட்டு, 2 விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ஒருவர் 2-வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு 1 வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
இலங்கை கோர்ட்டின் தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், வரும் 23-ந்தேதி நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்தியா-இலங்கை இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு தேவாலய திருவிழா நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் வரும் 20-ந்தேதி ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து நடைபயணமாக சென்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அதோடு நாளை முதல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் கருப்புக் கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் மீனவர்கள் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.